மேல்நிலை குடிநீர் தொட்டி விராலுாரில் இடிந்து விபத்து
செய்யூர்:செய்யூர் அடுத்த விராலுார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஊராட்சிக்கு உட்பட்ட வெற்றிக்காடு பகுதியில் வசிக்கும் 70 குடும்பத்தினருக்கு, 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தோக்கத் தொட்டி வாயிலாகம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.நாளடைவில், மேல்நிலை தேக்கத் தொட்டி சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துாண்கள் பலவீனமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தன. புதிய மேல்நிலைக் குடிநீர் தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மேல்நிலை தேக்கத் தொட்டி திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.இதையடுத்து, குடிநீர் கிணற்றில் உள்ள மின் மோட்டார் வாயிலாக, நேரடியாக குழாய்களை இணைத்து குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இதுகுறித்து, விராலுார் ஊராட்சி தலைவி இளவரசி கூறியதாவது:கடந்த மூன்று ஆண்டுகளாக, மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. ஊராட்சியில் போதிய நிதி இல்லை.அதனால், சேதமடைந்த மேல்நிலை தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., பொது நிதியில், புதிய மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், சில நாட்களாக பெய்து வந்த மழையால், பலவீனமாக இருந்த மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி இடிந்து விபத்துக்குள்ளானது, அடுத்த சில நாட்களில், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,யை நேரில் சந்தித்து, புதிய மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, மனு அளிக்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.