ஊராட்சி செயலர்களுக்கு சம்பளம் தராமல் அலைக்கழிப்பு
அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், 59 ஊராட்சிகள் உள்ளன.இங்கு மக்களுக்கு குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு பராமரித்தல், சாலை பராமரிப்பு, மத்திய - மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள, ஊராட்சி தலைவருக்கு உதவியாக, ஊராட்சி செயலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அதன்படி, அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 59 ஊராட்சிகளில், 52 ஊராட்சி செயலர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஏழு பணியிடங்கள் காலியாக உள்ளன.தற்போது, ஊராட்சி செயலர்களுக்கு, தமிழ்நாடு ஊராட்சிகள் எளிமைப்படுத்தப்பட்ட கணக்குகள் இணையதளத்தின் வாயிலாக, மாதந்தோறும் முறையாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த மே மாதத்தின் சம்பளத்தை, ஜூன் மாதத்தின் இன்றைய தேதி வரையில், ஊராட்சியின் ஊதிய கணக்கிற்கு பணம் விடுவிக்காமல் மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.தற்போது பள்ளி, கல்லுாரிகள் துவக்கப்பட்டு உள்ளதால், ஊராட்சி செயலர்களின் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது.இதனால், மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.மாவட்ட கலெக்டர் இதுகுறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சி செயலர்கள் எதிர்பார்க்கின்றனர்.