மின் விளக்குகள் பழுது பாலாற்று பாலத்தில் பீதி
செங்கல்பட்டு:மாமண்டூர் பாலாற்றில் மின் விளக்குகள் பழுதானதை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் - -இருங்குன்றம்பள்ளி இடையே பாலாற்றில், பாலங்கள் உள்ளன. இதில், சென்னையிலிருந்து தென்மாவட்டம் செல்லும் சாலையில் உள்ள பாலத்தில், மின் விளக்குகள் எரிவதால், வாகன ஓட்டிகள் எளிதாக செல்கின்றனர்.இதுபோன்று, தென்மாவட்டத்திலிருந்து சென்னை செல்லும் வழித்தடத்தில் உள்ள பாலத்தில், 25க்கும் மேற்பட்ட கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் எரியாமல் பழுதடைந்துள்ளன. இரவில் விளக்குகள் எரியாததால், பாலத்தில் உள்ள சாலையில் 'பேச் ஒர்க்' செய்யப்பட்டு உள்ளது தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி, சிறு சிறு விபத்துகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பாலத்தில் விபத்தில் சிக்கிய வாகனங்களின் உடைந்த பாகங்கள் மற்றும் மணல் துகள்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.இதன் காரணமாக, இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர்.பாலாற்றில் உள்ள பாலங்களை சீரமைக்கவும், புதிதாக மின் விளக்குகள் அமைக்கவும், கடந்த ஆண்டு 1.25 கோடி ரூபாயை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கீடு செய்தது.இப்பணி, தனியார் ஒப்பந்ததாரர் வாயிலாக செயல்படுத்தப்பட்டது. தற்போது, கடந்த சில மாதங்களாக, பாலத்தில் மின் விளக்குகள் முழுதுமாக பழுதடைந்து உள்ளன. விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, இவற்றை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.