மாணவர்களுக்கு சாதி, வருமான சான்று பெற சிறப்பு முகாம் நடத்த பெற்றோர் எதிர்பார்ப்பு
மதுராந்தகம், அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் சாதி,- வருமானம் உள்ளிட்ட சான்றிதழ் பெற சிறப்பு முகாம் அமைக்க வேண்டுமென, பள்ளி மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில், 26 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.அதில், 4,610 மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.இத்தேர்வில், 2,047 மாணவர்கள், 2,246 மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் கல்லுாரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக, பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வாங்கிச் செல்கின்றனர்.அவர்கள், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் சட்டக் கல்லுாரிகளில் விண்ணப்பிக்க சாதி, வருமானம், இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படுகின்றன.அதனால், இ- - சேவை மையங்களில் மாணவ, மாணவியர் பெற்றோருடன் காத்துக் கிடக்கின்றனர்.மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் விண்ணப்பிக்க அவகாசம் மே மாதத்துடன் முடிவு பெறுவதால், மாணவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் அவதியடைகின்றனர்.ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் மற்றும் சாதி, வருமானம், இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி போன்ற ஆவணங்களை பதிவு செய்து காத்துக் கிடக்கின்றனர்.* ஜமாபந்தியால் தாமதம்செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன், ஜமாபந்தி நிகழ்வு துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.அதனால், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஜமாபந்தி நிகழ்வுகளில் கவனம் செலுத்துகின்றனர்.எனவே, பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காக வரும் மாணவ, மாணவியருக்கு, பள்ளிகளிலேயே, கல்லுாரியில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை பதிவு செய்ய, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.