உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலை நகர் சிப்காட் பகுதியில் பார்க்கிங், மின்விளக்கு வசதி அவசியம்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மறைமலை நகர் சிப்காட் பகுதியில் பார்க்கிங், மின்விளக்கு வசதி அவசியம்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மறைமலை நகர்:மறைமலை நகர் சிப்காட் பகுதியில் வாகன நிறுத்துமிடம் மற்றும் மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் சிப்காட் பகுதியில் மறைமலை நகர், மெல்ரோசாபுரம், கீழக்கரணை, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில், 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். மறைமலை நகருக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள சாலைகள் கடுமையாக சேதமடைந்து உள்ளன. மேலும் பல இடங்களில், இரவில் மின் விளக்குகள் எரிவதில்லை. அத்துடன், தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்களை நிறுத்த, 'பார்க்கிங்' வசதியும் இல்லை. இதனால் அண்ணா சாலை, அடிகளார் சாலை, பெரியார் சாலை, மெல்ரோசாபுரம் சாலை, ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட முக்கிய சாலை ஓரங்களில், விபத்து ஏற்படும் வகையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள சாலைகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அவதியடைந்து வருகின்றனர். அதிக அளவில் பெண்கள் வேலைக்கு வந்து செல்லும் பகுதியான முத்துராமலிங்கத் தேவர் சாலையில், பல ஆண்டுகளாக மின் கம்பங்களில் உள்ள விளக்குகள் காட்சி பொருளாகவே உள்ளன. இருள் சூழ்ந்துள்ளதால், இந்த பகுதியில் அடிக்கடி மொபைல் போன் பறிப்பு, செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 'பார்க்கிங்' வசதி இல்லாததால், கன ரக வாகனங்களால் சக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, மறைமலை நகர் சிப்காட் பகுதியில் பார்க்கிங் வசதி, மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !