கரும்பாக்கத்தில் நிற்காத அரசு பேருந்து முற்றுகையிட்டு பயணியர் வாக்குவாதம்
திருப்போரூர், கரும்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தை பயணியர் முற்றுகையிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்தனர். திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை இடையே மடையத்துார், செம்பாக்கம், கொட்டமேடு, வெங்கூர், கரும்பாக்கம், வளர்குன்றம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. வாகன போக்குவரத்து அதிகரித்ததால், இந்த சாலை 13 கோடி ரூபாய் மதிப்பில், விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ -- மாணவியர், போக்குவரத்திற்கு பேருந்துகளையே நம்பி உள்ளனர். ஆனாலும், திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையில் உள்ள கரும்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில், அரசு பேருந்தை ஓட்டுநர்கள் நிறுத்தாமல் செல்வதாக, கரும்பாக்கம் கிராமத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையும், கரும்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல், சிறிது துாரம் தள்ளி நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பேருந்திற்காக காத்திருந்த பயணியர் ஓடிச்சென்று ஏற முயன்ற போது, திடீரென பேருந்து வேகமாக சென்றுள்ளது. உடனே பயணியர் சிலர், அங்கிருந்தோர் உதவியுடன் 'பைக்'கில் விரட்டிச் சென்று, பேருந்தை மடக்கி முற்றுகையிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாணவ - மாணவியர் பாதிப்பு
பயணியர் கூறியதாவது: தினமும் அரசு பேருந்துகள், பல நேரம் கரும்பாக்கம் நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதுகுறித்து நடத்துநர்களிடம் கேட்டால், அடுத்து வரும் பேருந்தில் வரும்படி அலட்சியமாக பதில் கூறுகின்றனர். இதனால், தினமும் வேலைக்குச் செல்லும் போது கால தாமதம் ஏற்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரும் சிரமப்படுகின்றனர். பெண்களுக்கு இலவச பயணம் என்பதால், பெண்களை கண்டால் பேருந்தை சிறிது துாரம் தள்ளி நிறுத்துகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.