உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இரண்டாம் கட்டமாக 20,026 பேருக்கு பட்டா

இரண்டாம் கட்டமாக 20,026 பேருக்கு பட்டா

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக, 20,026 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை, முதல்வர் ஸ்டாலின், பல்லாவரத்தில் நாளை வழங்குகிறார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுகாக்களில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு இடங்களில், ஆயிரக்கணக்கானோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள், பட்டா கோரி விண்ணப்பித்த நிலையில், கள ஆய்வு நடத்தி, தகுதியானோருக்கு வருவாய்த் துறையினர் பட்டா வழங்கி வருகின்றனர். இதில், அரசு நிலம், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை தடுக்க, சென்னையிலிருந்து, 32 கி.மீ., சுற்று வட்டாரத்திற்கு, 'பெல்ட் ஏரியா' எனும் மாநகர் சூழ்பகுதியாக, 1962ல் அரசு உத்தரவிட்டது. இப்பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கூடாது என, உத்தரவு உள்ளது. இதனால், ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் வசித்து வருவோருக்கு, பட்டா வழங்க முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு, திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்களில் பெல்ட் ஏரியா பகுதி தடையை நீக்கி, இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கடந்த பிப்., 10ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள, பெல்ட் ஏரியா மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டு, பிப்., 21ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பின், மாவட்டம் முழுதும் வீட்டுமனை பட்டா வழங்கும் பணியில், கடந்த பிப்ரவரியிலிருந்து வருவாய்த் துறையினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டனர். தற்போது மாவட்டத்தில், 20,026 பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டா தயார் நிலையில் உள்ளது. சென்னை தாம்பரத்தில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை, நாளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். அப்போது, பல்லாவரம் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டாக்களை முதல்வர் வழங்குகிறார் என, மாவட்ட நிர்வாக ம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை