வண்டலுார்: வண்டலுார் தாலுகாவைச் சேர்ந்த மக்கள், ஆதார் சேவைக்காக கூடுவாஞ்சேரி, தாம்பரம் பகுதிகளில் உள்ள ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் சிரமப்படுகின்றனர். இதனால் வண்டலுார், ஓட்டேரி பகுதியில் ஆதார் சேவை மையம் துவக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் தாலுகாவில் 32 கிராமங்கள் உள்ளன. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, அரசின் நேரடி ஆதார் சேவை மையம் இல்லை. இதனால், புதிய ஆதார் அட்டை விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண், பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு, தாம்பரம் மற்றும் கூடுவாஞ்சேரியில் இயங்கி வரும் ஆதார் மையங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. இந்த இரு இடங்களிலும், ஏற்கனவே கூட்டம் அலைமோதுவதால், சிறிய திருத்தங்களுக்கும் பல நாட்கள் அலைய வேண்டி உள்ளது. எனவே, வண்டலுார் தாலுகாவில் உள்ள ஓட்டேரி பகுதியில், அரசின் நேரடி ஆதார் சேவை மையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: வண்டலுார் தாலுகாவில் உள்ள 32 கிராமங்களும், ஜி.எஸ்.டி., சாலை மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் அருகே உள்ளதால், இப்பகுதியில் புதிதாக வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வங்கிக் கணக்கு துவக்குதல், வாக்காளர் அடையாள அட்டை முகவரி மாற்றம், பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தல் என, அனைத்திற்கும் ஆதார் எண் முதலில் கேட்கப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் தினமும், ஆதார் தொடர்பான சேவைக்காக கூடுவாஞ்சேரி, தாம்பரம் பகுதிகளுக்கு அலைய வேண்டியுள்ளது. தனியார் 'இ - சேவை' மையங்களில், ஆதார் அட்டையில் சில திருத்தங்கள் மட்டுமே செய்ய முடியும். தவிர, அங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், அரசின் சார்பில் இயங்கிவரும் நேரடி ஆதார் சேவை மையத்திற்கே அதிகமானோர் செல்கின்றனர். ஆனால், வண்டலுார் தாலுகாவில் கூடுவாஞ்சேரி நகராட்சி, தாம்பரம் ஆகிய இடங்களில் மட்டுமே, அரசின் நேரடி ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது. அங்கு ஒரு நபர் மட்டுமே பணியில் உள்ள நிலையில், தினமும் 50 நபர்களுக்கு மட்டுமே காலையில் 'டோக்கன்' வழங்கப்படுகிறது. அந்த டோக்கனை பெற, அதிகாலை 5:00 மணிக்கே செல்லும் நிலை உள்ளது. இதனால், தினமும் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிக கூட்டம் வருவதால், 100 ரூபாய் கட்டணத்திற்கு 200 ரூபாயாக பணம் வசூலிக்கப்படுகிறது. ஒரே நாளில் பணியை முடிக்க, 500 ரூபாய் 'கட்டிங்' கேட்பதாக கூறப்படுகிறது. இதனால், ஆதார் அட்டை தொடர்பான சேவைகளுக்கு, மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரை மக்கள் அலைய வேண்டி உள்ளது. எனவே, வண்டலுார் ஊராட்சி ஓட்டேரி பகுதியில், அரசின் நேரடி ஆதார் சேவை மையம் புதிதாக திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.