செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், மறைமலை நகர், செட்டிப்புண்ணியம், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில், 97.4 கோடி ரூபாயில், ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை, பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.சென்னையின் புறநகர் பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் அமைந்துள்ளது. மாவட்டத்தில், சென்னை பெருங்களத்துார் முதல்- செங்கல்பட்டு வரை, குடியிருப்புகள், வர்த்தக மையங்கள் அதிகரித்துள்ளன.மறைமலை நகர், மகேந்திரா வேர்ல்டு சிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில், தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். தொழிற்சாலைகளுக்கு சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன.மறைமலை நகர், செட்டிப்புண்ணியம் ஆகிய பகுதியில், ரயில்வே கேட் உள்ளது. இங்குள்ள, ரயில் பாதை வழியாக, மின்சார ரயில்கள், தென்மாவட்டங்களுக்கான விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் செல்கின்றன.அந்த நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படுவதால், வாகனங்கள் அணிவகுத்து சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அதேபோல், மேல்மருவத்துார் --- சோத்துப்பாக்கம் இடையில், சோத்துப்பாக்கத்தில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால், மேல்மருவத்துார் -- செய்யூர், கிழக்கு கடற்கரை செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.விடுமுறை நாட்களில், இந்த இடங்களை கடக்க நீண்ட நேரம் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், கேட் திறக்கப்படும்போது முந்திக்கொண்டு செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.இதை தவிர்க்க, ரயில்வே நிர்வாகம் மற்றும் தமிழக அரசு, மேம்பாலம் கட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, 2019- -- 20ம் ஆண்டு, மறைமலை நகர் பகுதியில, மேம்பாலம் கட்டும் பணிக்காக நிலம் கையகப்படுத்த, 24.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அதேபோல், 2018- -- 19ம் ஆண்டு, செட்டிப்புண்ணியம் -- மகேந்திரா வேர்ல்டு சிட்டி பகுதியில் நிலம் கையகப்படுத்த, 32.31 கோடி ரூபாயும், சோத்துப்பாக்கம் பகுதியில் நிலம் கையகப்படுத்த, 15.32 கோடி ரூபாயும், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.அதன்பின், செங்கல்பட்டு நெடுஞ்சாலைத்துறை -திட்டங்கள் மற்றும் வருவாய்த் துறையினர், மேம்பாலம் அமைய உள்ள இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது, மறைமலை நகரில், 34.09 கோடி ரூபாயும், செட்டிப்புண்ணியத்தில் 31.44 கோடி ரூபாயும், சோத்துப்பாக்கத்தில் 31.87 கோடி ரூபாயும் என, மொத்தம் 97.4 கோடி ரூபாயில், ரயில்வே மேம்பாலம் கட்ட ரயில்வே நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிக்கு டெண்டர் விடப்பட்டது.இப்பணியை, பிரதமர் நரேந்திர மோடி, இன்று காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார். இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ரயில்வே அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.நீண்டநாள் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வாக, மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை, ரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பணியை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைப்பதால், விரைவில் கட்டுமானப் பணி முடிந்து மேம்பாலங்கள் பயன்பாட்டிற்கு வரும் என, நம்பிக்கை உள்ளது.- ஆர்.விமல்,சமூக ஆர்வலர், புலிப்பாக்கம்.