உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / படூர் ஆறுவழி சாலையில் தொடர் விபத்து மேம்பாலம் அமைப்பதே நிரந்தர தீர்வு

படூர் ஆறுவழி சாலையில் தொடர் விபத்து மேம்பாலம் அமைப்பதே நிரந்தர தீர்வு

திருப்போரூர்:படூர் ஆறுவழிச் சாலையில், விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை சென்னை, மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை, ஆறு வழிப்பாதையாக உள்ளது.சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை, நான்கு வழிப்பாதையாக உள்ளது.இதில் படூர், கேளம்பாக்கம் பகுதியிலும், திருப்போரூர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், இங்கு புறவழிச் சாலையாக ஆறுவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.அதன்படி, படூர் மற்றும் தையூர் இடையே ஒரு புறவழிச் சாலையும், திருப்போரூர் மற்றும் ஆலத்துார் இடையே ஒரு புறவழிச் சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.படூர் மற்றும் தையூர் இடையிலான புறவழிச் சாலை, 4.6 கி.மீ.,க்கு அமைக்கப்பட்டு உள்ளது. திருப்போரூர் மற்றும் ஆலத்துார் இடையிலான புறவழிச் சாலை 7.4 கி.மீ.,க்கு அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டு புறவழிச் சாலைகளுக்கும் மொத்தம், 465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில நாட்களில், மேற்கண்ட புதிய சாலைகள், பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளன.இந்நிலையில், படூர் பகுதி ஓ.எம்.ஆர்., சாலையிலிருந்து ஊருக்குள் செல்லும் பிரதான சாலை குறுக்கே, மேற்கண்ட ஆறுவழிச் சாலை செல்கிறது.இந்த ஆறுவழிச் சாலை அமைந்த பகுதி வழியை கடந்து தான், அப்பகுதியினர் ஓ.எம்.ஆர்., சாலையை அடைகின்றனர்.ஆனால், இந்த பிரதான சாலை குறுக்கே ஆறுவழிச் சாலை செல்வதால், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சாலையை கடந்து செல்கின்றனர். மேலும், இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.விபத்தை தடுக்க அங்கு, தற்காலிக வேகத்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அது நிரந்தர தீர்வாக இருக்காது.அதே பகுதி தனியார் கல்லுாரி வளாகத்திற்கு இடையேயும், மேற்கண்ட ஆறுவழிச் சாலை செல்கிறது.அங்கு, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லுாரிக்கு மேம்பாலம் அமைத்தது போல, மக்களின் பாதுகாப்பு கருதி, படூர் பிரதான சாலை குறுக்கே செல்லும் ஆறுவழிச் சாலையிலும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாக, நேற்று முன்தினம் படூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில், மாவட்ட குறைதீர் கூட்டத்தில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, படூர் பிரதான சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.

விபத்துகள் அதிகரிப்பு

இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:படூர் பிரதான சாலையில் விபத்து அபாயம் உள்ளதால், படூர்வாசிகள் அச்சத்தில் உள்ளனர். இந்த புதிய புறவழிச் சாலையில் பள்ளி குழந்தைகள், வயதானவர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்டோருக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டு உள்ளது.இதில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.கிராமசபை கூட்டத்தில், சாலையில் இரும்பு தடுப்பு, உயர் மின் கோபுர விளக்கு, ஒளிரும் 'ஸ்டிக்கர்' உள்ளிட்டவை அமைக்க, மனு அளிக்கப்பட்டுள்ளது. இச்சாலை ஊருக்கு இடையே வந்துள்ளதால், பாதியாக பிரிந்துள்ளது. இச்சாலையில், திறப்பு விழாவிற்கு முன்பே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. சில நாட்களில் திறக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், மக்களின் பாதுகாப்பு கருதி மேம்பாலம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி