உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /   திருப்போரூரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க... அனுமதி: 1.60 டி.எம்.சி., நீரை சேமிக்க நீர்வள துறை திட்டம்

  திருப்போரூரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க... அனுமதி: 1.60 டி.எம்.சி., நீரை சேமிக்க நீர்வள துறை திட்டம்

சென்னை:திருப்போரூரில் 5,000 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட நீர்த்தேக்கம் புதிதாக அமைக்க, தமிழக கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் 1.60 டி.எம்.சி., நீரை சேமிக்க, நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், தேர்வாய் கண்டிகை ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, கடலுார் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தவிர, திருப்போரூரின் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

முயற்சி

தற்போது, சென்னையின் ஒரு மாத குடிநீர் தேவை ஒரு டி.எம்.சி.,யாக உள்ளது. இது, வரும் காலங்களில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, குடிநீர் தேவைக்கு கூடுதல் நீராதாரங்களை உருவாக்கும் முயற்சியில் அரசு இறங்கிஉள்ளது. இதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, தமிழ்நாடு உப்பு நிறுவனத்திற்கு சொந்தமான 5,000 ஏக்கர் நிலத்தில் புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படவுள்ளது. இதற்கு பட்ஜெட்டில், 471 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கோவளம், திருவிடந்தை, கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு இடையே, பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி இந்த நீர்த்தேக்கம் அமையவுள்ளது. இதில், 1.60 டி.எம்.சி., நீரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. திருப்போரூர், சிறுதாவூர், மானாமதி, கேளம்பாக்கம், தையூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட சிறிய ஏரிகளில் இருந்து இந்த ஏரிக்கு நீர்வரத்து கிடைக்கும். இந்த புதிய ஏரியை உருவாக்கும் பணிகளை, இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள 164 கோடி ரூபாயும், வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள 161 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அனுமதி

இதற்கான ஒப்பந்ததாரர் தேர்வும் முடிக்கப்பட்டு உள்ளது. இப்பணிக்கு, தமிழக கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருப்போரூர் அருகே அமையவுள்ள புதிய ஏரிக்கு, மாவட்ட அளவில் முதலில் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது. இப்போது மாநில அளவில் அனுமதி கிடைத்துள்ளது. மாநில சுற்றுச்சூழல் செயலர் தலைமையில், கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பகிங்ஹாம் கால்வாய் நீரோட்டத்தை பாதிக்காமல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி எதுவும் பெற வேண்டிய அவசியம் இல்லை. தற்போது கிடைத்துள்ள அனுமதியே போதுமானது. விரைவில் பணிகளை துவங்கவுள்ளோம். ஓராண்டிற்குள் ஏரியை கட்டமைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ