பெருங்களத்துார் பாலாறு குடிநீர் திட்டம் 3 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும்
பெருங்களத்துார்:தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டத்தில், பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதிகள் பேரூராட்சியாக இருந்த போது, முடிச்சூர் சாலை வழியாக செல்லும் பாலாறு குழாயில் இருந்து இணைப்பு கொடுத்து, ராஜிவ்காந்தி தெரு, திருவள்ளுவர் தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய இடங்களில், பாலாறு குடிநீர் வினியோகிக்கப்பட்டது.அப்போது, பெருங்களத்துார், பீர்க்கன்காரணை பகுதிவாசிகள், இந்த இடங்களில் பாலாறு தண்ணீரை பிடித்து, குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.அருகேயுள்ள பகுதிகளில் இருந்து வந்தும்பிடித்து சென்றனர். மக்களுக்கு பயனுள்ளதாக இருந்த பாலாறு குடிநீர் வினியோகம், திடீரென நிறுத்தப்பட்டது.தற்போது, உள்ளூர் ஆதாரம் வாயிலாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியுடன் பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை பகுதிகள் இணைக்கப்பட்டதால், மெட்ரோ அல்லது பாலாறு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.தாம்பரம் - முடிச்சூர் சாலை வழியாக பாலாறு குழாய் செல்வதால், அதிலிருந்து இணைப்பு எடுத்து, தொட்டிகளில் நிரப்பி, இப்பகுதிகளுக்கு வினியோகிக்கும் திட்டத்தில், முதல் கட்டமாக, 98 லட்சம் ரூபாய் செலவில் பெருங்களத்துார் பகுதிக்கான பணி, நேற்று முன்தினம் துவங்கியது.மூன்று மாதத்தில் இப்பணியை முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.அதனால், பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை பகுதிவாசிகளின் பல ஆண்டு கோரிக்கை விரைவில் நிறைவேற உள்ளது.அதே நேரத்தில், பெருங்களத்துாரில் பணி முடிந்ததும், பீர்க்கன்காரணையில் பணி துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.