உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சரிந்த பாலத்தை சீரமைக்காததால் சோமங்கலம் சாலையில் மறியல்

சரிந்த பாலத்தை சீரமைக்காததால் சோமங்கலம் சாலையில் மறியல்

தாம்பரம்:தாம்பரம் - சோமங்கலம் சாலையில், தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையை ஒட்டி, பாப்பான் கால்வாய் மற்றும் அடையாறு ஆறு செல்கிறது.மழைக்காலத்தில் இவை நிரம்பி, சாலையை ஒட்டிய நிலங்களில் வெள்ளம் தேங்கும். இதன் காரணமாக, அப்பகுதியில் மண் பிடிமானம் குறைந்து, சாலையில் திடீர் திடீரென பள்ளம் ஏற்படுவதும், உள்வாங்குவதும் தொடர்கிறது.சாலை உள்வாங்குவதை தடுக்க, 12கோடி ரூபாய் செலவில், 1 கி.மீ., துாரத்திற்கு சாலையை அகலப்படுத்தி, கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, இந்திரா நகர் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு செல்வதற்கான சிறுபாலத்தை ஒட்டி, ஆக., 24ம் தேதி பள்ளம் தோண்டினர். அப்போது, அந்த சிறுபாலம் சரிந்து, உள்வாங்கியது.இதனால், இந்திரா நகர் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இந்திரா நகர் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி மக்களின் வசதிக்காக, இந்திரா நகரில் இருந்து வெங்கடேஸ்வரா நகர் வழியாக மாற்று பாதை அமைக்கப்பட்டது.மாற்றுப்பாதை முறையாக இல்லாததால், வாகனங்களில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.லேசான மழை பெய்தாலே சேறும், சகதியுமாக மாறி, வாகனங்கள் செல்ல முடியவில்லை. இந்த நிலையில், 60 நாட்கள் ஆகியும், சரிந்த சிறுபாலத்தை சரிசெய்யாத மற்றும் தடுப்பு சுவர் பணி ஆமை வேகத்தில் நடப்பதை கண்டித்து, 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால், தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பேச்சு நடத்தி, சிறுபாலத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !