உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி...94.29 சதவீதம்! :கடந்த ஆண்டை விட 0.42 சதவீதம் குறைவு

செங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி...94.29 சதவீதம்! :கடந்த ஆண்டை விட 0.42 சதவீதம் குறைவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில், தேர்வெழுதிய 27,744 மாணவ - மாணவியரில், 26,160 பேர் தேர்ச்சி பெற்றனர். 94.29 சதவீதம் தேர்ச்சியுடன், செங்கல்பட்டு மாவட்டம், மாநில அளவில் 28வது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட 0.42 சதவீதம் குறைந்துள்ளது. செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம் என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்தில், 239 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.இதில் அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள், 79, அரசு உதவிபெறும் பள்ளிகள் 21, மெட்ரிகுலேஷன் மற்றும் சுயநிதி பள்ளிகள் 139 உள்ளன. கடந்தாண்டு, பிளஸ் 2 தேர்ச்சி 94.71 சதவீதமாக இருந்த நிலையில், மாநில அளவில் 18வது இடம் பெற்றது.இந்தாண்டு, இப்பள்ளிகளில் இருந்து, 12,982 மாணவர்கள், 14,762 மாணவியர் என, மொத்தம் 27,744 பேர் தேர்வு எழுதினர். இதில், 26,160 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இதில், 11,979 மாணவர்கள், 14,181 மாணவியர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 92.27. மாணவியர் தேர்ச்சி சதவீதம் 96.06. வழக்கம் போல், மாணவியரே, அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அரசு, நகராட்சி மற்றும் நலத்துறைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவியர், 11,257 பேரில், 10,020 பேர் தேர்ச்சி பெற்று, 89.01 சதவீதம் பெற்றனர்.தேர்வு எழுதிய மாணவர்கள் 4,918 பேரில், 4,137 பேர் தேர்ச்சி பெற்று, 84.12 சதவீதமும், மாணவியர் 6,339 பேரில், 5,883 பேர் தேர்ச்சி பெற்று, 92.81 சதவீதம் பெற்றனர்.அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவ - மாணவியர் 4,354 பேரில், 4,170 பேர் தேர்ச்சி பெற்று, 94.99 சதவீதம் பெற்றனர்.இதில், மாணவர்கள் 1,716 பேரில், 1,600 பேர் தேர்ச்சி பெற்று, 93.86 சதவீதமும், மாணவியர் 2,638 பேரில், 2,570 பேர் தேர்ச்சி பெற்று, 95.19 சதவீதமும் பெற்றனர்.செங்கல்பட்டு புனித மரியண்ணை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றது.மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவ - மாணவியர் 12,133 பேரில், 11,970 பேர் தேர்ச்சி பெற்று, 97.29 சதவீதம் பெற்றனர்.இதில், மாணவர்கள் 6,348 பேரில், 6,242 பேர் தேர்ச்சி பெற்று, 96.93 சதவீதமும், மாணவியர் 5,785 பேரில், 5,728 பேர் தேர்ச்சி பெற்று, 97.89 சதவீதமும் பெற்றனர்.மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில், 74 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. தேர்ச்சி சதவீதம் 94.29.இதன்படி, மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்டம், 28வது இடம் பிடித்துள்ளது. இதில், 81 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில், பிளஸ் 2 தேர்ச்சி விபரத்தை, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டார். முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் கூறுகையில்,''மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரையும், கல்லுாரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு வங்கிக் கடன், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்,'' என்றார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், நீண்ட காலமாக பள்ளிக்கு வராமல் இருந்த மாணவர்களை சேர்த்து, தேர்வு எழுத வைத்தோம். இந்த மாணவர்கள் தேர்ச்சி பெறாததால், இந்தாண்டு, 0.42 சதவீதம் தேர்ச்சி குறைந்து உள்ளது.- கற்பகம்,முதன்மை கல்வி அலுவலர்.அனந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்தாண்டு 57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்தாண்டு, நுாறு சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கிராமப்புறங்களில் இருந்து, மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு பேருந்து இல்லாமல் இருந்தது. இதுகுறித்து கலெக்டரிடம் தெரிவித்தோம். அதன் பின் பேருந்து இயக்கப்பட்டதால், கிராமப்புற மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வந்தனர். மாணவர்கள் பள்ளிக்கு தினமும் வந்ததால், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற முடிந்தது. முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளித்தனர்.- இ.ராஜேஷ்குமார்தலைமையாசிரியர், அனந்தமங்கலம்.

தேர்ச்சி சதவீதம்

ஆண்டு தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சிபெற்றோர் சதவீதம்2022 32690 30514 93.342023 31916 29528 92.522024 25242 23907 94.712025 27744 26160 94.29

நுாறு சதவீதம் தேர்ச்சிபெற்ற அரசு பள்ளிகள்

1.அனந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி2.குண்ணங்கொளத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி3.செங்கல்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி4.பாலுார் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி5.மணமை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி6.குமிழி ஏகலைவா உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை