மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் கம்பம் அமைத்து மின்விளக்கு பொருத்தம்
மதுராந்தகம்,நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில், மின்விளக்கு கம்பங்கள் அமைத்து, மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.மதுராந்தகத்திலிருந்து சூணாம்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.இந்த மேம்பாலத்தின் மீது மின்விளக்குகள் பழுதடைந்து, சில பகுதிகளில் எரியாமல் இருந்தன.மேலும், மேம்பாலத்தின் மீது நடந்த விபத்துகளால் உடைந்த மின்விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.ஆனால், மீண்டும் புதிதாக மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்படாமல் இருந்தன.ஒரே பகுதியில், இரு மார்க்கங்களிலும், ஐந்து மின்விளக்கு கம்பங்கள் இல்லாமல், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து இருந்தது.சேதமடைந்துள்ள மின் கம்பங்களை அகற்றி, புதிதாக கம்பங்கள் அமைக்கவும், பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்கவும், மாநில நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் மீது சேதமடைந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிதாக கம்பங்கள் அமைத்து, மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.இதனால், இரவு நேரங்களிலும் பகல் போல வெளிச்சம் இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சமின்றி, மேம்பாலத்தின் மீது பயணம் செய்து வருகின்றனர்.