போதையில் ஆம்புலன்ஸ் ஊழியரை தாக்கியவர் மீது போலீசில் புகார்
செங்கல்பட்டு: போதையில், ஆம்புலன்ஸ் ஊழியரை தாக்கியவர் மீது போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழன், 36; இரண்டு ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் பகுதியில் தங்கி, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தை ஓட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சீக்கனாங்குப்பத்தில் விபத்தில் சிக்கிய நபரை மீட்டு, கூவத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று, மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தார். இந்நிலையில்,விபத்தில் சிக்கிய நபரின் நண்பர்கள், மது போதையில் மருத்துவமனை வளாகத்தில் செந்தமிழனிடம், ஏன் மாற்று பாதையில் வந்தாய் என கூறி தாக்கினர். இது குறித்து, செந்தமிழன் அளித்த புகாரையடுத்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.