பொழிச்சலுார், கவுல்பஜாரில் தொடரும் மின் வெட்டால் அவதி
பம்மல்:பொழிச்சலுார், கவுல்பஜாரில் தொடரும் மின் வெட்டால், அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதை உடனே நீக்கி, தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லாவரம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பொழிச்சலுார் மூவர் நகர், அகத்தீஸ்வரர் கோவில் 2வது தெரு, வெங்கடேஸ்வரா நகர், பம்மல் நடராஜன் தெரு மற்றும் கவுல்பஜார் ஊராட்சி ஆகிய பகுதிகளில், அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால், பகுதிமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.பகுதிமக்கள் கூறியதாவது:அனகாபுத்துார் சிக்னல் அலுவலகம் உள்ள பொழிச்சலுார் பகுதிக்கான மின்மாற்றியில் ஏற்படும் பழுதே, இரவு நேர மின்வெட்டுக்கு காரணம்.கவுல்பஜாரில் மாங்காளியம்மன் கோவில் மற்றும் ஊராட்சி அலுவலகம் அருகேயுள்ள மின்மாற்றிகளில் பழுதானால், உடனடியாக யாரும் பழுதை சீரமைப்பதில்லை. இரவில் மின்சாரம் இல்லாததால், முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.ஒவ்வொரு முறையும், உதவி பொறியாளருக்கு போன் செய்து கேட்டாலும், உரிய முறையில் பதில் அளிப்பதில்லை. அப்படியே அழைப்பை அவர்கள் எடுத்தாலும், பழுதை நிரந்தரமாக சீரமைத்துவிட்டோம் என்கின்றனர்.ஆனாலும், மின் வெட்டு பிரச்னை தொடர்ந்து ஏற்படுகிறது. பல்லாவரம் மின் கோட்ட அதிகாரிகளும், இதுகுறித்து கண்டுகொள்வதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.