உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சொர்ணவாரி பருவத்திற்கு கொள்முதல் நிலையங்கள்... 44 இடங்களில்! முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை

சொர்ணவாரி பருவத்திற்கு கொள்முதல் நிலையங்கள்... 44 இடங்களில்! முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை

செங்கல்பட்டு: சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு வந்துள்ளதால், செங்கல்பட்டு மாவட்டத்தில், 44 இடங்களில், அரசு தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், வரும் நவம்பர் மாதம் வரை செயல்படும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.மாவட்டத்தில், 1.86 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது.

நெல் நடவு

பாலாற்றங்கரை பகுதியில், ஆழ்துளை கிணறுகள், கிணற்று நீராதாரங்களை பயன்படுத்தி, நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சொர்ணவாரி பருவத்தில், 32,000 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்யப்பட்டு, 16,750 ஏக்கர் நிலம் அறுவடைக்கு தயாராக உள்ளது.மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், கே.எம்.எஸ்., 2023- - 24 பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கவும், விவசாயிகளிடம் இருந்து, உடனடியாக நெல் கொள்முதல் செய்யவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.விவசாயிகள் நலன் கருதி, சன்ன ரக நெல் குவின்டால் ஒன்றிற்கு 2,450 ரூபாயும், பொது ரக நெல் குவின்டால் ஒன்றிற்கு 2,405 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும்போது, 17 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், எவ்வித முறைகேட்டிற்கும் இடமளிக்காத வகையில் பணிபுரிய வேண்டும்.குறைபாடுகள் கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட கிடங்கு அல்லது நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்க, முதுநிலை மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதற்கட்டமாக, ஒன்பது இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், கலெக்டர் அருண்ராஜ் ஆகியோர், கடந்த 27ம் தேதி துவக்கி வைத்தனர்.

பதிவு மூப்பு

தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, 35 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கி, கலெக்டர் உத்தரவிட்டார்.இந்நிலையங்கள், செப்., மாதம் துவங்கி, நவம்பர் மாதம் வரை செயல்படும் என, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.விவசாயிகள் தாங்கள் நெல் பயிடப்பட்டுள்ள பரப்பளவிற்கு, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சிட்டா, அடங்கல் பெற்று, கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில், தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.சொர்ணவாரி பருவத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், முதற்கட்டமாக ஒன்பது இடங்களில் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இரண்டாவது கட்டமாக, 35 இடங்களில் துவக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.- நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், செங்கல்பட்டு.

கொள்முதல் நிலையம் அமையும் இடங்கள்

பவுஞ்சூர் வட்டாரம்: பரமேஸ்வரமங்கலம், செம்பூர், அம்மனுார், மடையம்பாக்கம், நீலமங்கலம், பச்சம்பாக்கம்.சித்தாமூர் வட்டாரம்: புத்திரன்கோட்டை, பொலம்பாக்கம், நாங்களத்துார், கயப்பாக்கம்.அச்சிறுபாக்கம் வட்டாரம்: செண்டிவாக்கம், ஒரத்தி, வேடந்தாங்கல், எல்.எண்டத்துார்.மதுராந்தகம் வட்டாரம்: குன்னங்கொளத்துார், படாளம், கிணார், காட்டுதேவாதுார், சூரை, வில்வராயநல்லுார், மேலகண்டை, நீர்பெயர், நெல்லி, எல்.எல்.என்.புரம், பூதுார், வீணாக்குன்னம்.திருக்கழுக்குன்றம் வட்டாரம்: நத்தம்கரியச்சேரி, நெரும்பூர், தத்தலுார், வெள்ளப்பந்தல், பொன்பதர்கூடம், கீரப்பாக்கம், பெருமாளேரி, ஆயப்பாக்கம், அட்டவட்டம், நல்லாத்துார்.திருப்போரூர் வட்டாரம்: சிறுகுன்றம், சின்னஇரும்பேடு, முள்ளிப்பாக்கம், சின்னவிப்பேடு, வெண்பேடு, ஒரகடம்.காட்டாங்கொளத்துார் வட்டாரம்: களிவந்தப்பட்டு, வில்லியம்பாக்கம்.

புகார் அளிக்க...

முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம்044 - 2742 0071மேலாண்மை இயக்குனர் அலுவலகம் - டோல் ப்ரீ 1800 5993540கட்டுப்பாட்டு அறை 044 - 2642 1663 044 - 2642 1665


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ