2 டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
பல்லாவரம்:பல்லாவரத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்லாவரம் ஜி.எஸ்.டி.,சாலையில், இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இங்கு மது வாங்க வருபவர்களால் நெரிசலும், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இரவில் கடை மூடிய பின் விடிய விடிய கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்படுகிறது. மது குடிப்பவர்கள் அரை நிர்வாணமாக நின்று மக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர். ஆகையால் இந்த இரண்டு கடைகளையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பல்லாவரம் 13வது வார்டு குடியிருப்போர் பொது நல சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அ.தி.மு.க., கம்யூ., உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்று கோஷம் எழுப்பினர். வருவாய் துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று டாஸ்மாக் கடைகளை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யவதாக கூறியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.