உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதுப்பட்டினம் - வசுவசமுத்திரம் சாலை சீரமைக்க வலியுறுத்தல்

புதுப்பட்டினம் - வசுவசமுத்திரம் சாலை சீரமைக்க வலியுறுத்தல்

புதுப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் புறவழிப் பாதையிலிருந்து, வசுவசமுத்திரம் வரை, 3 கி.மீ.,க்கு தார்ச்சாலை உள்ளது. அப்பகுதியிலிருந்து, ஆயப்பாக்கம், சிட்டிலம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு, தனித்தனி சாலைகள் உள்ளன.வசுவசமுத்திரம் பகுதியினர், அத்தியாவசியத் தேவைகள், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு, புதுப்பட்டினம் வந்து செல்கின்றனர். பிற பகுதியினர், வசுவசமுத்திரம் பகுதி விவசாய பணிக்காக வந்து செல்கின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இச்சாலை முழுதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பள்ளங்கள் ஏற்பட்டு அபாயத்துடன் உள்ளது. தினசரி பள்ளி உள்ளிட்டவற்றுக்காக, இருசக்கர வாகனத்தில் சென்று திரும்புவோர், கற்களில் இடறி, பள்ளத்தில் தடுமாறி சிறு சிறு விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர்.இருளில் வாகனம் ஓட்ட இயலாமல் தவிக்கின்றனர். ஷேர் ஆட்டோ மேடு பள்ளங்களில் ஏறி இறங்குவதால், பயணியர் உடல்நல அவதிக்குள்ளாகின்றனர். இவ்வழியே இயக்கப்பட்ட அரசு பேருந்து, சாலை சீர்கேடு காரணமாக, நீண்டகாலத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டது.மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, இப்பகுதி வழியே அமைவதால், புதுப்பட்டினம் - வசுவசமுத்திரம் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. எனவே, பாதிப்பு கருதி, சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி