சாலை விபத்தில் இறந்த முதியவருக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் மறியல்
பவுஞ்சூர், பவுஞ்சூர் அடுத்த கடுகுப்பட்டு கிராமம்,பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மன்னன் 75; நேற்று மதுராந்தகம்-கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில் பாலுாரில் இருந்து கடுகுப்பட்டு நோக்கி சாலை ஓரத்தில் நடந்து சென்றார்.கடுகுப்பட்டு அருகே சென்று கொண்டு இருந்தபோது, சுரேஷ் 45 என்பவர் ஓட்டி வந்த டிராக்டர், நடந்து சென்ற மன்னன் மீது பின்புறத்தில் மோதியது, இதில் தலையில் பலத்த காயமடைந்த மன்னன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின் சம்பவ இடத்திற்கு வந்த அணைக்கட்டு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்,பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலை விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, டிராக்டர் உரிமையாளரான கடுகுப்பட்டு கிராமத்தை சேர்ந்த மோகன் வீட்டின் எதிரே அமரர் ஊர்தியை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அணைக்கட்டு போலீசார் போராட்டதில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, இழப்பீடு வழங்கவும், விபத்து ஏற்படுத்தியவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததன் பேரில் உறவினர்கள் கலைந்து சென்றனர்.