காயரம்பேடு ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மறைமலை நகர்: காட்டாங்கொளத்துார் அருகே, காயரம்பேடு ஊராட்சியில், மழைநீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சி விஷ்ணுப்ரியா நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சமீபத்தில் பெய்த கனமழையால், இந்த பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த பகுதியை ஆய்வு செய்த செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, மழைநீர் வடிகால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தலைமையில், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். நெல்லிக்குப்பம் -- கூடுவாஞ்சேரி சாலையில், காயரம்பேடு பகுதியில் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவரை இடித்து அகற்றினர். மேலும், தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த கட்டடங்களை, 'பொக்லைன்' இயந்திரங்கள் மூலமாக இடித்து அகற்றி, மழைநீர் கால்வாயை துார்வாரி, மழைநீர் செல்ல வழி ஏற்படுத்தினர். மேலும், 'வரும் காலங்களில், மழைநீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை செய்தனர்.