உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொது பாதையான கோவில் இடம் சாலை அமைக்க கோரிக்கை

பொது பாதையான கோவில் இடம் சாலை அமைக்க கோரிக்கை

புழுதிவாக்கம்:பெருங்குடி மண்டலம், வார்டு 186, புழுதிவாக்கம், ஏ.ஜி.எஸ்., காலனியில், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள, 37வது மனைப்பிரிவை, அரசியல்வாதிகள் பின்புலத்துடன் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பில் வைத்திருந்தார். இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை தொடர்ந்து, அந்த இடத்தை தனிநபர் பொது பொறுப்பில் ஒப்படைத்தார். பின், அப்பகுதியில் வசிக்கும் 20 தெருக்களை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்போர், அவ்விடத்தில் சிவசக்தி விநாயகர் கோவில் கட்ட முடிவு செய்தனர். இதற்காக, அறக்கட்டளை துவக்கப்பட்டது. தொடர்ந்து, கோவிலைச் சுற்றி, நந்தனார் தெருவிலிருந்து ஏ.ஜி.எஸ். காலனி மூன்றாவது தெருவை இணைக்கும் விதமாக, வாகனங்கள் சென்றுவர ஏதுவாகவும், உற்சவர் ஊர்வலத்திற்காகவும், பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக கோவிலுக்கு சொந்தமான 750 ச.அடி., பரப்புள்ள இடத்தில், 60 நீளம், 12 அடி அகலத்தில் பாதை அமைக்கப்பட்டது. அறக்கட்டளை சார்பில், முறையாக விண்ணப்பிக்கப்பட்டு மின்சாரம், குடிநீர் இணைப்பு பெறப்பட்டது.கடந்த ஆண்டு கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகின்றன. தற்போது புழுதிவாக்கத்தின் பல பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் நடப்பதால், கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட பொதுப் பாதை வழியாகவே லாரிகள், பள்ளி வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் பயணிக்கின்றன. அதிக வாகனங்கள் பயணிப்பதால், இந்த பாதை கரடு முரடாக மாறிவிட்டது. மழை நேரத்தில், சேறும் சகதியுமாக மாறி, வெயிலில் புழுதி பறக்கிறது. கடந்த வாரம் மாநகராட்சி வாகனம் தலை குப்புற கவிழ்ந்து, ஒருவர் பலத்த காயமடைந்து, சிகிச்சையில் உள்ளார்.எனவே, இந்த வழித்தடத்தை, தார் சாலையாக அமைக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !