பாளையர்மடம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்த கோரிக்கை
செய்யூர்:செய்யூர் பாளையர்மடம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாளையர்மடம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.மக்கள் அடர்த்தியாக வசிக்கும் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குழாய்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் சாலையோரத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.மேலும் சாலை ஓரத்தில் தேங்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசு உற்பத்தி ஆவதால்,இரவு நேரத்தில் பொதுமக்கள் கொசுத் தொல்லையால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போது வரை கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.ஆகையால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதியில் கழிவுநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.