நெடுஞ்சாலையோரம் காய்ந்த மரங்கள் வெட்டி அப்புறப்படுத்த கோரிக்கை
மதுராந்தகம்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரங்களில் புளிய மரம் மற்றும் காட்டுவாகை மரங்கள் நடவு செய்யப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தன.இதில் தற்போது, 30 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான புளிய மரங்கள் மற்றும் காட்டுவாகை மரங்கள், அதிக வெப்பம் மற்றும் உரிய பராமரிப்பின்றி காய்ந்துள்ளன.மாமண்டூர் பயணியர் நிழற்குடை, ஜானகிபுரம், கள்ளபிரான்புரம், படாளம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், இதுபோன்ற காய்ந்த மரங்கள் அதிக அளவில் உள்ளன. இவை, சூறைக்காற்றில் உடைந்து விழும் நிலையில் உள்ளன.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் உள்ள இதுபோன்ற காய்ந்த மரங்கள் விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இவற்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.