தடுப்புச்சுவர் இல்லாத தரைமட்ட கிணறு பாதுகாப்பு கருதி மூடி அமைக்க கோரிக்கை
ஊனமாஞ்சேரி:ஊனமாஞ்சேரியில், சாலையோரம் உள்ள கிணற்றில் தடுப்புச் சுவர் இல்லாததால், அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரி ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்ளன. இதில், 2வது வார்டுக்கு உட்பட்ட பாரிவள்ளல் தெரு, பிரதான சாலையில், தனியாருக்கு சொந்தமான கிணறு, தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது.சாலையை ஒட்டி, திறந்த வெளியில் கிணறு உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கிணற்றில் தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அப்பகுதிவாசிகள் புகார் எழுப்பி உள்ளனர்.அப்பகுதிவாசிகள் கூறியதாவது:சாலைக்கு மிக நெருக்கமாக, தடுப்புச்சுவர் இல்லாமல், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த கிணற்றில், 10 அடி ஆழத்திற்கு நீர் உள்ளது.எட்டு ஆண்டிற்கு முன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். அவ்வப்போது, கால்நடைகளும் உள்ளே விழுந்து, அப்பகுதிவாசிகளால் காப்பாற்றப்படுகிறது.கிணற்றின் அருகே, 60 வீடுகள் உள்ள தனியார் குடியிருப்பு உள்ளது. அங்கு வசிக்கும் குழந்தைகள், மாலை நேரம், இந்த கிணறு ஓரமாக விளையாடுகின்றனர். இதனால், அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது.தவிர, சாலைக்கு மிக நெருக்கமாக உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது.எனவே, அசம்பாவிதம் நடக்கும் முன், நிலத்தின் உரிமையாளர், கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் கட்டவோ அல்லது, கிணற்றின் மேல்பகுதியில், இரும்பு கம்பிகளால் சட்டங்கள் அமைக்கவோ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.