வண்டலுார்: வண்டலுார், ஜி.எஸ்.டி., சாலையில், மைய தடுப்பு அகற்றப்பட்டதால் ஏற்பட்டுள்ள மேடு பள்ளங்களை சீரமைத்து, சாலையை சமன்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருங்களத்துார் அடுத்த இரணியம்மன் கோவில் முதல் வண்டலுார் உயிரியல் பூங்கா வரையிலான 2400 மீ., துாரமுள்ள ஜி.எஸ்.டி., சாலை மட்டும், எட்டு வழிச்சாலையாக இல்லாமல், ஆறு வழிச் சாலையாக உள்ளது. இந்த இடைப்பட்ட துாரத்தில், வண்டலுார் ரயில் நிலையம் மற்றும் வாலாஜாபாத் சாலையை இணைக்கும் மேம்பாலம் உள்ளது. தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் வரும் வாகனங்களும், வாலாஜாபாத் சாலையிலிருந்து மேம்பாலம் வழியாக செங்கல்பட்டு மார்க்கத்தில் பயணிக்கும் வாகனங்களும், வண்டலுார் ரயில் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி., பிரதான சாலையில் இணைகின்றன. அவ்வாறு இணையும் இடத்தில், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தன. இதனால், வண்டலுார் ரயில் நிலையத்தின் எதிரே, பிரதான சாலைக்கும் அணுகு சாலைக்கும் இடையே கட்டப்பட்டிருந்த, 200 மீ., துாரமுள்ள தடுப்பு சுவரை அகற்றி, சா லையை அகலப்படுத்தும் பணி நடந்தது. இதனால், மைய தடுப்பு சுவர் அகற்றப்பட்ட 200 மீ., துாரமுள்ள இடம், தற்போது மேடு பள்ளங்களாக, சமனற்றதாக காட்சியளிக்கிறது. இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களின் சக்கரங்கள் இந்த மேடு பள்ளங்களில் சிக்குவதால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, அகற்றப்பட்ட மைய தடுப்பு சுவர் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைத்து, ஜி.எஸ்.டி., சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.