மருதேரி சாலையை சீரமைக்க கோரிக்கை
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகில் சேதமடைந்துள்ள மருதேரி சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் -மருதேரி சாலை 10 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை மருதேரி, கருநிலம்,கோவிந்தபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை நெல்லிக்குப்பம் ----- திருப்போரூர் சாலையின் இணைப்பு சாலையாகும். இந்த சாலையில் கோவிந்தபுரம்,கோகுலாபுரம், மெல்ரோசாபுரம், கருநிலம், மருதேரி உள்ளிட்ட பகுதிகள் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர் இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், சரக்கு வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் முறையாக செல்ல முடியாத நிலை உள்ளது. சாலை ஓரம் உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் சாலையையும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். கருநிலம் பகுதியில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றவும், பள்ளங்களை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.