கல் குவாரி அமைக்க ஆதரவாக தீர்மானம் அதிகாரிகள் விசாரிக்கக்கோரி சாலை மறியல்
அச்சிறுபாக்கம்:செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்டு, நெற்குணம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்டு வயலுார், நெற்குணம், சிறுவிளாம்பாக்கம், கடப்பேரி உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன.இப்பகுதியில், ஏரி பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தின் வாயிலாக, மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில், விவசாயமே முக்கிய பிரதான தொழில்.இந்நிலையில், நெற்குணம் அடுத்த வயலுார் நிலப்பகுதியில் கல் குவாரி அமைப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத் துறையினர் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வயலுார், நெற்குணம், சிறுவிளாம்பாக்கம், புளியனி, துாதுவிளம்பட்டு, கடப்பேரி, புத்தமங்கலம் கிராம மக்கள் ஒன்றிணைந்து, கல் குவாரி எதிர்ப்புக் குழு ஆரம்பித்து போராட்டம் நடத்தி வந்தனர்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், கலெக்டரை சந்தித்து, வயலுார் ஊராட்சி தலைவர் தமிழரசி மீது புகார் அளித்தனர். அதில், ஊராட்சி தலைவர் தமிழரசி 20 லட்சம் ரூபாயும், ஊராட்சி செயலர் 5 லட்சம் ரூபாயும் லஞ்சம் பெற்றுக் கொண்டு, கல் குவாரி நடத்த ஆட்சேபனை இல்லை என, தீர்மானம் நிறைவேற்றியதாக கூறியிருந்தனர்.முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரை பதவி நீக்கம் செய்யவும், ஊராட்சியில் நடைபெற்றுள்ள பணிகளை ஆய்வு செய்யவும், அந்த மனுவில் கோரியிருந்தனர்.நேற்று, மனு மீது, நெற்குணம் ஊராட்சி அலுவலகத்தில் நேரடி விசாரணை மற்றும் ஆய்வு நடைபெற உள்ளதால், ஊராட்சி தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி செயலர் விசாரணைக்கு ஆஜராக கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.இந்நிலையில், மதியம் 12 மணி வரை, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து, ஆய்வுக்கு வர வேண்டிய அதிகாரிகள் வராததால், அப்பகுதியில் கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட மக்கள், திடீரென தொழுப்பேடு -- சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்து வந்த அச்சிறுபாக்கம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வந்து, ஊராட்சியில் விசாரணை செய்ய வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரினர்.போலீசாரின் அழைப்பினை ஏற்று, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், நெற்குணம் ஊராட்சிக்கு வந்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர் வராமல், துணை பி.டி.ஓ., வந்ததால், அவரை ஊராட்சி அலுவலகத்தில் சிறை பிடித்து, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, வரும் திங்கட்கிழமை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்த இருப்பதாக உறுதி அளித்தனர். அதனால், போராட்டத்தை கைவிட்ட மக்கள் கலைந்து சென்றனர்.