20 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலை வனத்துறை அனுமதி மறுப்பால் சிக்கல்
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் ஒன்றியம், அகதீஸ்வரமங்கலத்தில் இருந்து சாலுார் ஊராட்சிக்குச் செல்லும் 1.5 கி.மீ., துார சாலை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இச்சாலையை தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, கரடுமுரடாக மாறியுள்ளது.மழை நேரத்தில் சாலையில் பல இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்குகிறது.இதனால், இரவில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் செல்வோர் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.இதுதொடர்பாக இப்பகுதி மக்கள், சாலுார் ஊராட்சி நிர்வாகம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், அமைச்சர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனுவும் அளித்து உள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, வனத்துறையிடம் அனுமதி பெற்று, மேற்கண்ட சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.