உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக... ரோப் வே: மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் ஆய்வு

மாமல்லை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக... ரோப் வே: மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் ஆய்வு

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் அதிகரித்து வரும் சுற்றுலா வாகனங்களால், சிற்ப பகுதிகள் உள்ள சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க,'ரோப் வே' எனப்படும் உயர் போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆராய உள்ளது.மாமல்லபுரத்தில் உள்ள பாறைக் குன்றுகளில், கி.பி. 7 - 8ம் நுாற்றாண்டுகளில், பல்லவ மன்னர்கள் கலையம்ச சிற்பங்களை வடித்துள்ளனர்.பாறை வெட்டு கற்களில் உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், ஒரே பாறையில் தனித்தனி ரதமாக செதுக்கப்பட்டுள்ள ஐந்து ரதங்கள், பாறை விளிம்பில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்ட அர்ஜுனன் தபசு, பாறை உட்புறம் குடையப்பட்ட மகிஷாசுரமர்த்தினி குடவரை உள்ளிட்ட குடவரைகள், சர்வதேச பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன. உள்நாடு, சர்வதேச பயணியரை கவர்ந்து, அவற்றை காண திரள்கின்றனர்.சென்னையை ஒட்டியே, இப்பகுதி உள்ளதுடன் கடற்கரை விடுதிகள், மது விருந்து, கடல் உணவுகள் ஆகியவற்றுக்கு புகழ்பெற்ற உணவகங்களும் இங்கு நிறைந்துள்ளன. இதன் காரணமாக, சென்னை பகுதியினர் மட்டுமின்றி பல்வேறு பகுதியினரும் வார இறுதி, அரசு விடுமுறை, பண்டிகை ஆகிய நாட்களில், பொழுதுபோக்கிற்கு இங்கு தான் ஏராளமாக திரள்கின்றனர்.அரசு, மாநகர பேருந்துகளில் வரும் பயணியர் குறைவு. பெரும்பாலானோர், தனி வாகனத்தில் வரும் நிலையில் கார், இருசக்கர வாகனம், வேன், பேருந்து ஆகிய வாகனங்கள், மாமல்லபுரத்தில் அதிக அளவில் குவிகின்றன. இதனால், குறுகிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இங்கு பிரதான சாலைகளாக கிழக்கு ராஜ வீதி, கடற்கரை சாலை, பழைய சிற்பக்கல்லுாரி சாலை, தென்மாட வீதி, ஐந்து ரதங்கள் வீதி, கலங்கரை விளக்க சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை, பகிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை ஆகிய சாலைகள் உள்ளன.உள்ளூர், சுற்றுலா வாகனங்கள் இச்சாலைகளில் செல்கின்றன. இச்சாலைகள், நீண்ட காலத்திற்கு முன், 23 அடி அகலத்தில் அமைக்கப்பட்டவை. இதனால், குறுகியதாக உள்ளன.தற்கால சுற்றுலா போக்குவரத்திற்கு ஏற்ப, விசாலமான சாலைகள் இல்லை. மேலும், சாலையோர கடைகள் சாலையை ஆக்கிரமித்து உள்ளன. நடைபாதை வியாபாரமும், சாலையை ஆக்கிரமித்தே நடக்கிறது. சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால், வாகனங்கள் வெளியிலிருந்து உள்ளே வர இயலாமலும், உள்ளேயிருந்து வெளியே செல்ல இயலாமலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எதிரெதிர் திசையில் செல்லவும் முடியாத நிலை உள்ளது.மேலும், மாமல்லபுரத்தில் வாகனங்களை நிறுத்த, முறையான வாகன நிறுத்துமிடம் இல்லாததால், குறுகிய சாலையோரம், வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்டநேரம் போக்குவரத்து முடங்குகிறது. பாதசாரிகள் நடக்க கூட முடியாமல் தவிக்கின்றனர்.மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது, நான்கு மணி நேரம் வரை நெரிசல் நீடித்து, வாகனங்கள் ஆமை வேகத்தில் நகரும் நிலை உள்ளது.மருத்துவ அவசரத்திற்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. இதனால், இப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்குகிறது.டிசம்பர் - ஜனவரி மாதங்களில், மேல்மருவத்துார் தைப்பூச உற்சவ வழிபாட்டிற்காக, ஆதிபராசக்தி பக்தர்கள், தினமும் ஏராளமான பேருந்து திரண்டு, போக்குவரத்து முற்றிலும் முடங்குவதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இங்குள்ள சாலைகளை, தற்கால போக்குவரத்திற்கு ஏற்ப விரிவுபடுத்தி, மேம்படுத்த வேண்டியது அவசியம். இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில், சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன. வருங்கால போக்குவரத்திற்கான மேம்பாட்டில், பாரம்பரிய சிற்ப பகுதியின் நுண்ணிய சுற்றுச்சூழல் தன்மை குறித்தும், கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.அதற்கேற்ப போக்குவரத்து சாலைகளை வரைமுறைப்படுத்தி, திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, 'ரோப் வே' எனப்படும், உயர் போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு செய்ய உள்ளது. இதுகுறித்து, தற்போதைய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில், அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை