உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேதகிரீஸ்வரர் கோவிலில் விரைவில் ரோப்கார்: பக்தர்கள் எண்ணிக்கை விபரங்கள் சேகரிப்பு

வேதகிரீஸ்வரர் கோவிலில் விரைவில் ரோப்கார்: பக்தர்கள் எண்ணிக்கை விபரங்கள் சேகரிப்பு

திருக்கழுக்குன்றம்::திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் தரிசிக்கும் பக்தர்கள் வசதிக்காக, ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டப் பணிகளை துவக்க கருதி, கோவிலில் தரிசிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை, தனியார் ஒப்பந்த நிறுவனம் கணக்கெடுக்கிறது.திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. ஹிந்து சமய அறநிலையத்துறை, இக்கோவிலை நிர்வகிக்கிறது. சென்னை அருகில், இக்கோவில் உள்ள நிலையில், திருவண்ணாமலை கிரிவலம் செல்ல இயலாத பக்தர்கள், இங்கு திரள்கின்றனர். 500 அடி உயர குன்றின் உச்சியில் அமைந்துள்ள கோவிலுக்கு, அடிவாரத்திலிருந்து, 565 படிகளில் ஏறிச் செல்லவேண்டும். முதியோர், பெண்கள், குழந்தைகள் படிகளில் ஏற சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக, பவுர்ணமி கிரிவலம், பிற உற்சவ நாட்களில் பெரும்பாலோர் படி ஏறும் சிரமம் காரணமாக, கீழிருந்தே வணங்குகின்றனர். கோவில் ஊழியர்களும், கோவிலுக்கு சென்று திரும்புவது தாதமாகிறது. அங்கு பாதுகாப்பு கண்காணிப்பும் கேள்விக்குறியாகிறது.பக்தர்கள் நலன் கருதி, மலைக்கோவிலுக்கு ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த, பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இச்சூழலில், ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அரசின் இட்காட் நிறுவனம் ஆய்வுசெய்து, திட்ட சாத்தியக்கூறு உள்ளதாக தெரிவித்தது. கோவில் குன்றின் மேற்கில், செங்கல்பட்டு சாலையில் இருந்து, உச்சிக்கு ரோப் கார் இயக்க சாதனங்கள் நிறுவ, மண் பரிசோதிக்கப்பட்டது. திட்ட மதிப்பீடாக, 15 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. சில ஆண்டுகள் தாமத சூழலில், 19 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.ஒரு மணி நேரத்தில், 400 பேர் பயணிக்கும் பொருட்டு திட்டம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.புதுடில்லியைச் சேர்ந்த வேப்கோஸ் நிறுவன ஊழியர்கள் தினசரி தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை, சேகரிக்கின்றனர்.மலைக்குன்றில் உள்ள பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் உருவாக்கிய குடவரை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. குடவரை ஒட்டியே, ரோப் கார் செயல்பட உள்ளது.ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த, தனியார் நிறுவனத்தை நியமித்துள்ளோம். முதல்கட்டமாக, கோவிலில் தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை விபரங்களை, ஊழியர்கள் கணக்கெடுக்கின்றனர். அதன் அடிப்படையில், கட்டணம் நிர்ணயிப்பது, இதனால் கிடைக்கும் வருவாய் ஆகியவை குறித்து ஆய்வுசெய்து, அரசிடம் அறிக்கை அளிப்பர். அதன் பிறகே திட்டத்திற்கு முழுமையாக ஒப்பந்தம் அளிக்க முடிவெடுக்கப்படும்.- நிர்வாகம், வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம்பக்தர்கள் எண்ணிக்கை, உள்ளூர் பக்தரா, வெளியூர் பக்தரா என்ற விபரம், வெளியூர் பக்தர்கள் வாகனத்தில் வருவது குறித்து விபரங்கள் சேகரிக்கிறோம். பக்தர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிப்பது குறித்தும் ஆய்வு செய்கிறோம். 10 நாட்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.-- ஊழியர்கள், வேப்கோஸ் நிறுவனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை