விபத்தில் பலியான 5 பெண்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்
மாமல்லபுரம்,மாமல்லபுரம் அருகே, அதிவேகமாக வந்த கார் மோதி இறந்த ஐந்து பெண்களின் குடும்பங்களுக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆறுதல் தெரிவித்து, அரசு நிவாரணமாக, தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கினார்.மாமல்லபுரம் அடுத்த, பையனுார் ஊராட்சி, பண்டிதமேடைச் சேர்ந்தவர்கள் ஆந்தாயி, 71, விஜயா, 55, கவுரி, 61, லோகம்மாள், 65, யசோதா, 60.இவர்கள், நேற்று முன்தினம் பிற்பகல், அப்பகுதியில் மாடு மேய்த்தனர். மாடுகள் மேய்ந்ததை கண்காணித்தபடி, பழைய மாமல்லபுரம் சாலையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.அப்போது, மாமல்லபுரம் நோக்கி அதிவேகமாக சென்ற கார், அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கொடூர விபத்தில், அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.முதல்வர் ஸ்டாலின், இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, அவர்களின் குடும்பங்களுக்கு, தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.இதையடுத்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, கூடுதல் கலெக்டர் அனாமிகா ஆகியோருடன், நேற்று பண்டிதமேடு சென்றார்.இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசு நிவாரணமாக, தலா இரண்டு லட்சம் ரூபாய் அளித்தார்.