உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கழுக்குன்றம் குடிநீர் திட்டத்திற்கு ரூ.29.96 கோடி தீர்வு! :குடும்பத்திற்கு தினசரி தலா 350 லி., வழங்க முடிவு

திருக்கழுக்குன்றம் குடிநீர் திட்டத்திற்கு ரூ.29.96 கோடி தீர்வு! :குடும்பத்திற்கு தினசரி தலா 350 லி., வழங்க முடிவு

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பேரூராட்சியின் வருங்கால குடிநீர் தேவைக்காக, 30 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், குடிநீர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமென, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய இடமாக விளங்குகிறது. இங்கு திருக்கழுக்குன்றம், ருத்திரான் கோவில், முத்திகைநல்லான்குப்பம், மங்கலம், நாவலுார் ஆகிய பகுதிகளுடன், 18 வார்டுகள் உள்ளன.கடந்த 2011 கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 30,000 பேராக இருப்பினும், தற்போதைய வளர்ச்சி சூழலில், 50,000மாக அதிகரித்துள்ளது.இந்நகரம் தாலுகா, வட்டார வளர்ச்சி ஆகிய நிர்வாகங்களின் தலைமையிடமாக உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில், பவுர்ணமி கிரிவலத்திற்கு பெயர் பெற்றது. சார் -- பதிவாளர், பொதுப்பணி துறை, நெடுஞ்சாலை, வேளாண்மை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்டவை உள்ளன.இதனால் தினசரி, வெளியூர் மக்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இப்பகுதி குடிநீர் தேவைக்கு, பாலாற்றிலும், ஏரிகளிலும் உள்ள கிணறுகளே நீராதாரமாக உள்ளன.அவற்றிலிருந்து, சில நாட்களுக்கு ஒரு முறையே, நபருக்கு 70 லிட்டர் வீதம், 24 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.வல்லிபுரம் பாலாற்றில் உள்ள கிணறுகளிலிருந்து தினசரி 5 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. கீரப்பாக்கம், முடையூர் ஆகிய பகுதிகள் ஏரிகளில் உள்ள, தலா ஐந்து திறந்தவெளி கிணறுகளிலிருந்து, தினசரி 6 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.பாலாற்றில் ஆண்டுதோறும் வெள்ளப்பெருக்கும் ஏற்படும் போது, அதிலுள்ள கிணறுகள் பாதிக்கப்படுகின்றன. ஏரி கிணறுகள் கோடையில் வறண்டு விடுகின்றன. இதனால், திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.இதுமட்டுமின்றி, பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நிலத்தடி குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து, குடிநீர் வெளியேறி வீணாவதால், குடிநீர் வினியோகம் தடைபடுகிறது.எனவே, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நிர்வாகம், 'பி.வி.சி., காஸ்டிங்', கான்கிரீட் குழாய்களை முற்றிலும் அகற்றி, புதிய குழாய்கள் அமைத்து மேம்படுத்த முடிவெடுத்து, தமிழக அரசிடம் பரிந்துரைத்தது.இதுதொடர்பாக பரிசீலித்த அரசு, குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்காக, 2023 - 24 'அம்ரூத் 2.0' திட்டத்தின் கீழ், 29.96 கோடி ரூபாய் ஒதுக்கியது.முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரியில், நெம்மேலி கடல்நீரில் குடிநீர் உற்பத்தி செய்யும் இரண்டாம் ஆலை துவக்க விழாவில், திருக்கழுக்குன்றம் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தையும் துவக்கினார்.அதைத்தொடர்ந்து பணிகள் துவக்கப்பட்டு, தற்போது நடைபெற்று வருகின்றன.வல்லிபுரம் பாலாற்றில் நான்கு புதிய கிணறுகள், அங்கிருந்து திருக்கழுக்குன்றம் பகுதிக்கு, 11 கி.மீ., நிலத்தடி குழாய் அமைக்கப்படுகிறது. திருக்கழுக்குன்றத்தில் 55 கி.மீ., நிலத்தடி குழாய் அமைப்பது, நான்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், இரண்டு தரைமட்ட தொட்டிகள் கட்டுவது என, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.குழாய் அமைக்கும் பணிகளால் பெயர்க்கும் சாலைகள், இதே திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படவும் உள்ளன.

சீரான குடிநீர்

தற்போதைய குடிநீர் தேவைக்காக மட்டுமின்றி, வருங்கால தேவையையும் கருதி இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். பாலாற்றில் புதிய கிணறுகள், திருக்கழுக்குன்றத்தில், 2.5 லட்சம் லிட்டர், 2 லட்சம் லிட்டர், 1.5 லட்சம் லிட்டர், 60,000 லிட்டர் ஆகிய கொள்ளளவுகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்படுகின்றன. ஒரு குடும்பத்திற்கு ஐந்து பேர் என்ற அடிப்படையில், தினசரி அரைமணி நேரம் வீதம், 350 லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிட்டு உள்ளோம். அனைத்து இடங்களிலும் சீராக குடிநீர் வழங்க, ஒரே தடிமன் உள்ள குழாய் அமைக்கிறோம்.- யுவராஜ்,திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை