செங்கை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
செங்கல்பட்டு, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி சென்னை, காஞ்சிபுரம், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த ரயில் நிலைய நடைமேடையில் ரயில்வே போலீசார் சார்பில் பயணிகள் பாதுகாப்பு குறித்து செயல்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ரயில்வே இன்ஸ்பெக்டர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்பு சங்கத்தினர் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடித்துக் காட்டினர். தொடர்ந்து பயணியர் தங்க நகைகள் அணிந்து ஜன்னல் ஓரம் அமர்வதால் நடைபெறும் திருட்டு சம்பவங்கள், ரயில்மீது கல் வீசுவதால் பயணியருக்கு ஏற்படும் பாதிப்புகள், படியில் பயணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ரயில்வே போலீசார் விளக்கினர்.