துாய்மை பணியாளர் உயிரிழப்பு எதிரொலி மின் கேபிள் சீரமைப்பு; அதிகாரி சஸ்பெண்ட்
சென்னை,மின்சாரம் பாய்ந்து பெண் துாய்மை பணியாளர் பலியானதையடுத்து, கண்ணகி நகரில் சேதமடைந்த, நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட மின் கேபிள்களை மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. சென்னை, கண்ணகி நகரில் சாலையில் நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட மின் கேபிள் பழுதடைந்திருந்தது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி இரவு பெய்த மழைநீர், சேதமடைந்த மின் கேபிள் பகுதியில் தேங்கியது. அடுத்த நாள் அதிகாலை, அதன் மீது நடந்த சென்ற வரலட்சுமி, 30, மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலே பலியானார். இவர், சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்தில் துாய்மை பணியாளராக இருந்தார். இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு பின், கண்ணகி நகரில் சேதமடைந்துள்ள மின் பகிர்மான புதைவட கேபிள்களை சீரமைக்க, மின் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கி, 12 தெருக்களில், 1.7 கி.மீ., சேதமடைந்த கேபிள்களை மாற்றி அமைத்து வருகிறது. மேலும், அரை அடியில் பதிக்கப்பட்ட கேபிள்கள், ஒன்றரை அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி பதிக்கப்படுகின்றன. மின் விபத்தால் மீண்டும் அசம்பாவிதம் நடக்காத வகையில், பள்ளத்தை மூடி கான்கிரீட் போடப்படுகிறது. இதன் மூலம், மின் கேபிளால் ஏற்படும் உயிர் சேதம் தவிர்க்கப்படும் என, மின் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்நிலையில், பெண் துாய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்த விவகாரத்தில், அந்த பகுதிக்கு உப்பட்ட துரைப்பாக்கம் பிரிவு அலுவலக உதவி பொறியாளர் சுரேந்திரனை, மின் வாரியம், 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.