அரசு புறம்போக்கு நிலத்தில் செம்மண் கொள்ளை... அமோகம்!
செங்கல்பட்டு: வண்டலுார், ஊனமாஞ்சேரியில், அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து செம்மண் மற்றும் சவுடு மண் கொள்ளை அமோகமாக நடைபெற்று வருகிறது. வருவாய்த்துறை, போலீசார், கனிமவளத்துறை அதிகாரிகள் சிலர் ஆசியோடு நடக்கும் இந்த கொள்ளையில், 10 கோடி ரூபாய்க்கு மேல் மண் திருடப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், சென்னையின் நுழைவாயிலாக உள்ளதால், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானம், புதிய சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகளுக்கு செம்மண் மற்றும் சவுடு மண் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதனால் தற்போது, வண்டலுார் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து, செம்மண் மற்றும் சவுடு மண் கொள்ளை அதிகமாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் தாலுகாவில் உள்ள ஊனமாஞ்சேரி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.இங்கிருந்து இரவு நேரங்களில், சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள், 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக செம்மண் மற்றும் சவுடு மண்ணை வெட்டி எடுத்து, லாரிகள் வாயிலாக கடத்தி வருகின்றனர்.இதே கிராமத்தில், புல எண் 480ல் உள்ள 13 ஏக்கர் மற்றும் புல எண் 481ல் உள்ள 11 ஏக்கர் பரப்பளவு என, மொத்தம் 24 ஏக்கர் பரப்பளவில் செம்மண்ணை வெட்டி எடுத்ததில், ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த செம்மண் கொள்ளை கடந்த மூன்று ஆண்டுகளாக வருவாய்த் துறை, கனிம வளத்துறை, போலீசார் ஆதரவுடன் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, கிராமத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.கடத்தப்படும் இந்த செம்மண்ணை, தனியார் தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பூச்செடிகள் வளர்க்கும் நிறுவனங்களுக்கு, விற்பனை செய்து வருகின்றனர். ஒரு லாரி செம்மண் மற்றும் சவுடு மண் 7,000 ரூபாய் முதல், 10,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.மண் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர், முதல்வர் தனிப்பிரிவுக்கு சமூக ஆர்வலர்கள் மனு அனுப்பினர்.இந்த மனு குறித்து விசாரணை செய்து நடவடிக்க எடுக்க, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர், வண்டலுார் தாசில்தார் ஆகியோருக்கு, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.அதன் பின், வண்டலுார் தாசில்தார், கனிம வள உதவி இயக்குநர், வட்ட துணை ஆய்வாளர், வண்டலுார் குறு வட்ட நில அளவையர்கள், வனத்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர், போலீசார் ஆகியோர் கூட்டாக இணைந்து, ஊனமாஞ்சேரி கிராமத்தில், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், கடந்தாண்டு செப்டம்பரில் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில், 3,160 யூனிட் அளவுள்ள செம்மண் மற்றும் சவுடு மண் திருடப்பட்டுள்ளது தெரிந்தது. அந்த வகையில் தற்போது வரை, 10 கோடி ரூபாய்க்கு மேல் செம்மண் கடத்தப்பட்டுள்ளதாக தெரிந்தது.இத்துடன் மண் கொள்ளை நிறுத்தப்படாமல், கடந்த ஆண்டு செப்., 19ம் தேதி,'பொக்லைன்' வாயிலாக பல அடி அளவிற்கு தோண்டி, மீண்டும் செம்மண் கொள்ளை நடந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மண் திருடியதாக, கிராமவாசிகள் அளித்த புகாரில் தெரியவந்தது.இவ்வாறு, திருட்டுத்தனமாக தொடர்ந்து அரசு நிலத்தில் மண் திருடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியருக்கு, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா, கடந்தாண்டு செப்., 26ம் தேதி கருத்துரு அனுப்பி வைத்தார்.ஆனால், நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.புகார் மீது நடவடிக்கை இல்லாததால், மண் கடத்தலில் ஈடுபடுவோர் சுதந்திரமாக கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், இந்த செம்மண் கொள்ளை, பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரின் துணையோடு நடந்து வருவதாகவும் கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, செம்மண் கொள்ளையை தடுத்து, சம்பவத்தில் தொடர்புள்ளவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'கவனிப்பு' வாங்கும் அதிகாரிகள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, கால்நடை மேய்ச்சலுக்காக கிராமத்தினர் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலத்தில் பல அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, செம்மண் கொள்ளை நடந்துள்ளது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. செம்மண் கொள்ளைக்கு பள்ளம் தோண்டியதால், கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பது அரிதாக உள்ளது. செம்மண் கடத்தலை தடுக்க, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கிராமவாசிகள்,ஊனமாஞ்சேரி, வண்டலுார்.