வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாலங்கள் வேலைகள் முடிந்தது நன்றி. மற்ற வேலைகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு சீக்கிரம் கொண்டுவர வேண்டும். நெடுஞ்சாலை துறைக்கு நன்றி
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், ரயில்வே கடவுப்பாதையை கடந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, அதிக அளவிலான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கடந்த தி.மு.க., ஆட்சியில், 2008ம் ஆண்டு ரயில்வே மேம்பால பணிகள் துவங்கப்பட்டன.கடந்த 2011ம் ஆண்டு, ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மேம்பால பணிகள் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன.மீண்டும், 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பு ஏற்ற பின், 138.27 கோடி மதிப்பீட்டில், 2021 நவம்பர் மாதம் அமைச்சர் வேலு தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இடையிடையே பணிகளில் தொய்வு ஏற்பட்டு வந்தது. தற்போது, 75 சதவீத மேம்பால பணிகள் முடிந்த நிலையில், தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.ஸ்ரீபெரும்புதுார் மார்க்கத்தில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலை வரும் மார்க்கத்தில் பணிகள் முடிந்துள்ளதால், அந்த ஒரு புறம் மட்டுமாவது மேம்பாலத்தை போக்குவரத்திற்கு திறக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கடவுப்பாதையில், காலை மற்றும் மாலை நேரங்களில், இருபுறமும் 1 கி.மீ., துாரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.எதிர்திசையிலும் வாகனங்கள் நிற்பதால், அம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.தற்போது, பண்டிகை காலங்களில் தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால், இங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.எனவே, கடந்த காலங்களில், பெருங்களத்துார் மேல் பாலத்தை ஒரு பக்கம் திறந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததை போல, இந்த மேம்பாலத்தையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மேம்பால கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஸ்ரீபெரும்புதுார் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள், ஜி.எஸ்.டி., சாலையில் இறங்கும் வழியில், கட்டுமான பணிகள் முடிந்துள்ளன.இருப்பினும், மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் உள்ளதால், தாம்பரம் மார்க்கத்தில் பணிகள் முடிய, குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் தேவைப்படும். மொத்த பணிகளும் நிறைவடைய ஆறு மாதங்கள் வரை தேவைப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பாலங்கள் வேலைகள் முடிந்தது நன்றி. மற்ற வேலைகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு சீக்கிரம் கொண்டுவர வேண்டும். நெடுஞ்சாலை துறைக்கு நன்றி