சிறுதானிய உணவு திருவிழா சுய உதவி குழுவினர் பங்கேற்பு
மறைமலை நகர், - தமிழக அரசு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில், வட்டார அளவிலான பாரம்பரிய சிறுதானியங்கள் உணவு திருவிழா, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நேற்று காலை நடந்தது.இந்நிகழ்ச்சியை, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், ஊட்டச்சத்து, உடல்நலன், சுகாதாரம் பேணுதல், குழந்தைகள் மற்றும் பெண்கள் தினசரி உணவில் பயன்படுத்த வேண்டிய உணவு பொருட்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. சிறுதானிய உணவு பொருள்களை சிறப்பாக செய்த பெண்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில், காட்டாங்கொளத்துார் ஒன்றிய குழு தலைவர் உதயா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.திருப்போரூரில் நடந்த நிகழ்ச்சியை, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் துவக்கி வைத்தார். இதில், திருப்போரூர் வட்டாரத்தில் உள்ள, 53 மகளிர் குழுக்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அவர்கள் தங்கள் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவு வகைகள், உடலுக்கு சத்து தரும் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.இதில், திருப்போரூர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஜானகி, முதல் நிலை மேற்பார்வையாளர் ராஜேஸ்வரி ஆகியோர் நடுவராக பங்கேற்று, உணவுகளை சுவைத்து பார்த்து, சிறந்த உணவு தயாரித்தவர்களை தேர்ந்தெடுத்தனர்.இதில், சிறந்த உணவு செய்தவர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.அதேபோல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில், விழிப்புணர்வு வண்ணக்கோலம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பாக, கையெழுத்து இயக்கமும் நடந்தது. இந்நிகழ்ச்சியில், திருப்போரூர் பி.டி.ஓ., சிவகலைசெல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.