மேலும் செய்திகள்
போலீஸ் ஸ்டேஷன் முன் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
26-Aug-2025
மறைமலை நகர்:மறைமலை நகர் காவல் நிலையம் அருகில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் சிப்காட் செல்லும் பெரியார் சாலையில், மறைமலை நகர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சாலையில் தினமும் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் சரக்கு வாகனங்கள், ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள இடங்களில், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருவோரின் வாகனங்கள் மற்றும் வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் தொழிற்சாலைகளில் வேலை முடித்து வரும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக, காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விபத்து, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி, கார், பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள், சாலை ஓரம் மற்றும் அருகில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான பூங்கா அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன், நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் புதிய பூங்கா அமைக்கும் பணிகள், நகராட்சி சார்பில் நடைபெற்று வருகின்றன. இதனால், அந்த இடத்தில் இருந்த இரு சக்கர வாகனங்கள் அகற்றப்பட்டு, பூங்கா நுழைவாயில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக இந்த பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. விரைவில் பூங்கா கட்டுமான பணிகள் நிறைவடைந்து, பூங்கா பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில், இந்த வாகனங்கள் இடையூறாக உள்ளன. எனவே, வாகனங்களை முறையாக அகற்றவும், யாரும் உரிமை கோராத வாகனங்களை முறையாக ஏலம் விட்டு அப்புறப்படுத்தவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
26-Aug-2025