மேலும் செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை தாராளம்
18-Aug-2025
மறைமலை நகர்:மறைமலை நகர் தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். மறைமலை நகர் நகராட்சி, முதலாவது வார்டு தைலாவரம் பகுதியில், தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 960 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசித்து வந்த 600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், ஏழை மக்களுக்கும் இங்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு இரவு நேரங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இங்கு வசிக்கும் சிலர், வெளியூர்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கொண்டு வந்து, கல்லுாரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக போதை பழக்கம் இல்லாத நபர்களும், இந்த பழக்கத்திற்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள 'என் பிளாக்' மற்றும் 'எம் பிளாக்'கில் வசிக்கும் சிலரால், போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. இதை அப்பகுதிவாசிகள் தட்டிக் கேட்கும் போது, அந்த நபர்கள் அருகிலுள்ள மலைக்குச் சென்று பதுங்கி விடுகின்றனர். சில மாதங்களுக்கு முன், கஞ்சா போதை நபர்களால், இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இவற்றை தடுக்க வேண்டிய கூடுவாஞ்சேரி போலீசார், கண்டும் காணாமல் உள்ளனர். எனவே, இப்பகுதியில் போலீசார் தொடர்ந்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட வேண்டும். கஞ்சா விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
18-Aug-2025