கிணற்றில் விழுந்து புள்ளிமான் இறப்பு
சேலையூர்,:சேலையூர் அருகே கிணற்றில் மிதந்த புள்ளிமானின் உடலை, வனத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனை செய்து, புதைத்தனர்.சேலையூர் பகுதியில் உள்ள வயல்வெளியில், தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், ஏகப்பட்ட புள்ளி மான்கள் உணவு தேடி சுற்றித்திரிவது வழக்கம். சேலையூர் காவல் நிலையம் எதிரே தண்ணீர் முழுமையாக நிரம்பி காணப்படும் வயல்வெளி தரை கிணற்றில், நேற்று காலை, புள்ளிமான் ஒன்று தவறி விழுந்தது. பின் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது.இது குறித்து, காவல் நிலையம் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் வனத்துறையினர் சென்று பார்த்தபோது, மானின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதையடுத்து, உடலை மீட்ட, வனத்துறையினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, மானின் உடலை அடக்கம் செய்தனர்.