காட்டாங்கொளத்துார் பள்ளிக்கு மாணவர் வெடிகுண்டு மிரட்டல்
மறைமலை நகர், காட்டாங்கொளத்துாரில், தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே பள்ளி மாணவரை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். தாம்பரம் போலீஸ் கமிஷனரக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று அதிகாலை 5:15 மணியளவில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள ஜே.ஆர்.கே., பள்ளியில், காலை 8:00 மணிக்கு வெடிகுண்டு வெடிக்குமென, பொத்தேரி மகாத்மா காந்தி சாலையில் நின்று இருவர் பேசிக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார். உடனே, அழைப்பையும் துண்டித்துள்ளார். இது குறித்து, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிந்தது. மேலும், இதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், நேற்று மாதாந்திர தேர்வுக்கு படிக்காததால், பள்ளிக்கு விடுமுறை விட வேண்டும் என்ற நோக்கத்தில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அந்த மாணவரை எச்சரித்து அனுப்பினர்.