இரவு நேரத்தில் அடிக்கடி திருட்டு செங்கை புறநகர்வாசிகள் அச்சம்
மறைமலை நகர்:செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் திம்மாவரம், ஆத்துார், வில்லியம்பாக்கம், பாலுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் செங்கல்பட்டில் இருந்து வில்லியம்பாக்கம் வரை செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லையிலும், தேவனுாரில் இருந்து பாலுார் காவல் நிலைய எல்லையிலும் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி, இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடப்பதால், கிராமத்தினர் அச்சமடைந்து உள்ளனர்.கடந்த 26ம் தேதி இரவு, ஆத்துாரில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 50 சவரன் நகை திருடப்பட்டது.கடந்த சில மாதங்களுக்கு முன், வில்லியம்பாக்கம் பகுதியில் உள்ள அடகு கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது.அதே இரவில், வெண்பாக்கம் கிராமத்தில் உள்ள முருகன் கோவில் உண்டியல், மர்ம நபர்களால் திருடப்பட்டது.கடந்த மாதம் ஆப்பூர் கிராமத்தில், வீட்டின் பூட்டை உடைத்து, 30 சவரன் திருடப்பட்டது.கடந்தாண்டு ஜூன் மாதம், பாலுார் வசந்தம் நகரில், இரவில் வீடு புகுந்து திருட முயன்ற நபரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கடந்த 13ம் தேதி, திம்மாவரத்தில் உள்ள தனியார் கல்லுாரி பேராசிரியர் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, 6 சவரன் நகை திருடப்பட்டது.அதே போல, ஆத்துார் கிராமத்தில், ஒரு வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, 25,000 ரூபாய், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டன.அதே நாளில், ஆத்துார் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2.5 சவரன் தங்க செயினை, மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.இவ்வாறு தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களால், இந்த பகுதிவாசிகள் பீதியடைந்து உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:திம்மாவரம், ஆத்துார் கிராமங்களில் கடந்த ஓராண்டாக, அடிக்கடி தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பது, பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கிராமங்களில் முன்பு, சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் திருடப்பட்டு வந்தன.தற்போது, வீடுகளில் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை காரணமாக, இந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.எனவே, செங்கல்பட்டு தாலுகா போலீசார் இந்த பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.