உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இரும்புலிச்சேரி தற்காலிக பாதை சேதம் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தல்

இரும்புலிச்சேரி தற்காலிக பாதை சேதம் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தல்

நெரும்பூர்: இரும்புலிச்சேரி பாலாற்று தற்காலிக தரைப்பாதை வெள்ளத்தில் மூழ்கியதால், அப்பகுதிக்கு செல்வோர் பாண்டூர் வழியே செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் அருகில், பாலாறு கடக்கிறது. எடையாத்துார் ஊராட்சிப் பகுதியில் ஆறு இரண்டாக பிரிந்து, இரும்புலிச்சேரி ஊராட்சிப் பகுதி வரை தனித்தனியே கடந்து, மீண்டும் கூடுகிறது. இரண்டு பகுதிகளும், ஆறுகள் இடையே தனித்தீவாக உள்ளன. தீவு பகுதியை, நெரும்பூர் -- வாயலுார் சாலை வழியே, திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுடன் இணைக்க, 30 ஆண்டுகளுக்கு முன், இரும்புலிச்சேரி பாலாற்றில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம், கடந்த 2015 வெள்ளப்பெருக்கில் இடிந்தது. இப்பகுதி போக்குவரத்திற்காக, பழைய பாலத்திற்கு 1 கி.மீ., தெற்கில், முந்தைய வீராண திட்ட கான்கிரீட் குழாய்கள் வைத்து, தற்காலிக மண் தரைப்பாதை அமைக்கப்பட்டது. இப்பாதை, ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் உருக்குலையும். தற்போதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இப்பாதை சேதமடைந்தது. இதனால் அப்பகுதியினர், எடையாத்துார் -- பாண்டூர் பாலம் வழியே, 5 கி.மீ., சுற்றிச் செல்கின்றனர். இரும்புலிச்சேரி, எடையாத்துார் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பிற பகுதியினர், பாண்டூர் வழியே செல்லுமாறு வருவாய், நெடுஞ்சாலை துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகளை அருகில் கொண்டு செல்வதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி