| ADDED : மார் 09, 2024 10:56 PM
மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுராந்தகம் அருகே, அய்யனார் கோவில் சந்திப்பு பகுதியில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் சென்று கொண்டிருந்தன.அப்போது, மாடு ஒன்று தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றதால், ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.இதில், பின்னால் வந்து கொண்டிருந்த, திண்டிவனத்திலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்து மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் அனந்தகிருஷ்ணன் 37, என்பவர் ஓட்டி வந்த 'ஸ்கோடா' கார் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாயின.இந்த விபத்தில், அரசு பேருந்தில் பயணம் செய்த பயணியர், அதிர்ஷ்டவசமாக சிறிய அளவிலான காயங்களுடன் உயிர்தப்பினர்.சொகுசு பேருந்து மற்றும் காரில் பயணம் செய்தவர்கள் காயங்கள் இன்றி தப்பினர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில், 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அரசு பேருந்தில் பயணம் செய்த பயணியர், மாற்றுப் பேருந்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.