பராமரிப்பில்லாத அம்மா பூங்கா ராமாபுரத்தில் வீணாகும் அவலம்
அச்சிறுபாக்கம்:எலப்பாக்கம் அடுத்த ராமாபுரத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்மா பூங்கா, பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், வேலாமூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், பெரியோர் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அம்மா பூங்கா, உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டது.குழந்தைகள் பொழுதுபோக்க, விளையாட்டு உபகரணங்களும் இங்கு பொருத்தப்பட்டன.இளைஞர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க, உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டு, அதில் பல உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக, சிமென்ட் கான்கிரீட், 'பேவர் பிளாக்' நடைபாதை, எல்.இ.டி., விளக்குகளுடன் கூடிய கம்பம், பார்வையாளர்கள் அமர இருக்கை வசதியும் உள்ளது.அத்துடன் ராட்டினம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், டென்னிஸ் விளையாட்டு, கழிப்பறை, குடிநீர் வசதி, தோட்டம் மற்றும் கழிப்பறை பராமரிப்புக்கு தேவையான தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இத்தனை வசதிகள் இருந்தாலும், பூங்காவை சரியான முறையில் ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், அனைத்து உபகரணங்களும் பழுதடைந்து உள்ளன.நடை பயிற்சி தளம் சேதமடைந்துள்ளது. வளாக பகுதியில் குப்பை தேங்கி உள்ளதுடன், நடந்து செல்ல முடியாத வகையில் காலி மது பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடங்கின்றன.உடற்பயிற்சி பூங்காவில் உள்ள பொருட்களும் திருடப்படுகின்றன.இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் பகுதியாக, இப்பூங்கா மாறி வருகிறது.அதனால், பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடத்தை பராமரிப்பு செய்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, கலெக்டர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.