தாழ்வாக செல்லும் மின்கம்பி ஊத்துக்குழி கிராமத்தினர் பீதி
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம்- - வண்டலூர் சாலை, மேலக்கோட்டையூர் ஊராட்சியில் அடங்கிய ஊத்துக்குழி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.கேளம்பாக்கம்- - வண்டலூர் சாலையிலிருந்து, ஊத்துக்குழி கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையோரத்தில், மின்கம்பத்தில் செல்லும் மின் கம்பிகள் கைக்கு எட்டும் அளவிற்கு தாழ்வாக செல்கின்றன.இதனால், வாகனங்களில் பொருட்களை கொண்டு வர முடியாமலும், கிராம வாசிகள் சாலையில் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். மேலும், கவனக்குறைவாக சாலையோரம் சென்றால், மின்கம்பி உரசி விபரீதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.எனவே, தாழ்வாக செல்லும் மின்கம்பியை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.