கிடப்பில் நெற்களம் அமைக்கும் பணி சாலையில் நெல் உலர்த்தும் அவலம்
பவுஞ்சூர்: பவுஞ்சூர் அருகே தண்டரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல், வேர்க்கடலை, கேழ்வரகு, உளுந்து போன்றவை பருவத்திற்கு ஏற்றதுபோல பயிரிடப்படுகின்றன.அதிகப்படியாக, சம்பா பருவத்தில் நெல் பயிரிடப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர்த்த நெற்களம் இல்லாததால், விவசாயிகள் தங்கள் நெற்பயிரை சாலையில் உலர்த்தி வருகின்றனர்.பல ஆண்டுகளாக, இப்பகுதியில் நெற்களம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்த நிலையில், கடந்த ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், 8.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2,400 சதுர அடி பரப்பளவில் நெற்களம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.அடித்தளம் அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில், கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டு, நெற்களம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், தற்போது நெற்களம் இல்லாமல் விவசாயிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கிடப்பில் போடப்பட்டுள்ள நெற்களம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.