| ADDED : டிச 31, 2025 05:55 AM
சித்தாமூர்: மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில், போந்துார் பகுதியிலுள்ள முக்கிய சாலை சந்திப்பில் எச்சரிக்கை பலகை இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். சித்தாமூர் பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு இடையே செல்லும், 38 கி.மீ., மாநில நெடுஞ்சாலை உள்ளது. சூணாம்பேடு, நுகும்பல், சித்தாமூர், முதுகரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையைப் பயன்படுத்தி மதுராந்தகம், செங்கல்பட்டு, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தினமும் இச்சாலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த சாலையில், சித்தாமூர் அருகே போந்துார் கிராமத்தில் அச்சிறுபாக்கம் செல்லும் முக்கிய சாலை சந்திப்பில், பல ஆண்டுகளாக எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடை இல்லை. இதனால், வேகமாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி, விபத்தில் சிக்கி வருகின்றனர். இங்கு எச்சரிக்கை பலகை வைக்கும்படி வாகன ஓட்டிகள் வலியுறுத்தியும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதனால், அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் பலர் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, இந்த சாலை சந்திப்பில் எச்சரிக்கை பலகை அமைக்கவும், வேகத்தடை அமைக்கவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.